ஊத்துக்கோட்டை, ஆக.21: பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஆரிக்கம்பேடு கிராமத்தில் விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் உள்ள பூச்சி அத்திப்பேடு பகுதிக்குச் சென்று அங்கிருந்து திருவள்ளூர், ஆவடி, சென்னை, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். இதற்காக ஆரிக்கம்பேடு பகுதியிலிருந்து இணைப்பு சாலை வழியாக ஏரிக்கால்வாயில் இறங்கி செல்வார்கள்.
இதனால், இப்பகுதி மக்கள் ஆரிக்கம்பேட்டில் இருந்து பூச்சி அத்திப்பேட்டிற்கு இணைப்பு சாலையும், அங்கு செல்லும் ஏரிக்கால்வாயின் குறுக்கே பாலமும் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பாலமும், இணைப்பு தார்சாலையும் போடப்பட்டது. இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றின் அருகில் இருந்த பழைய பாலம் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் சேதமடைந்து உடைந்தது. இதனையடுத்து, புதிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, ஆரிக்கப்பேடு கொசஸ்தலை ஆற்றின் அருகில் உடைந்த பாலத்தை அகற்றிவிட்டு ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பாலத்தின் கட்டுமான பணி தொடங்கப்பட்டு, இதுவரை 50 சதவீத பணிகள் நிறைவுபெற்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது.