புழல், நவ.19: மழை பொழிவு குறைந்ததால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வந்த உபரிநீர் 1,500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,713 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 18.52 அடியாக உள்ளது. ஏரிக்கு நேற்று முன்தினம் 285 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 910 கன அடியாக அதிகரித்துள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, மழை குறைந்ததால் புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வரும் உபரிநீர் அளவு 1,500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரி உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தி உள்ளார். இதேபோல், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 582 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 13.46 அடி உயரத்தில் நீர்மட்டம் உள்ளது. ஏரிக்கு 84 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கனமழை முன்னெச்சரிக்கையாக சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு நேற்று முன்தினம் 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், அருகில் இருந்த விளை நிலங்களில் உபரிநீர் புகுந்து நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. மழை குறைந்துள்ள நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்டு வந்த உபரிநீர் நேற்று முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஏரிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும், கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படும், என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


