ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சிக்கு நீர் மேலாண்மை சான்றிதழ்: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர், கலெக்டரிடம் வழங்கினார்
திருவள்ளூர், நவ.19: புதுதில்லியில் ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற 6வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவில், நீர் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சிக்கான சான்றிதழை, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், மாவட்ட கலெக்டர் பிரதாப்பிடம் வழங்கினார். புதுதில்லி விக்யான் பவனில் ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில், 6வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் ஊராட்சி நீர் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு, 3வது இடத்திற்கான விருதினை, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப்பிடம் வழங்கினார்.
அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், இணை இயக்குநருமான ஜெயக்குமார் உடனிருந்தார். முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரதாப், நீர்மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய நீர் விருது பெற்றதை முன்னிட்டு ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாலாபுரம் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர், ஊரக வளர்ச்சி மேலாண்மை வல்லுநர், மண்டல, வட்டார துணை அலுவலர், ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


