பள்ளிப்பட்டு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கவலை
பள்ளிப்பட்டு, செப்.19: திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி பட்டத்தில் விவசாயிகள் நெற்பயிர் அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 65 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உடனுக்குடன் விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகளில் நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் நொச்சிலி, வடகுப்பம், பொம்மராஜுபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 3 நாட்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்கில் நிரம்பியுள்ளதால், ஏராளமான நெல் மூட்டைகள் திறந்த வெளியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. லாரிகள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் மழைக்கு நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இடவசதி இல்லாததால், மூட்டைகளை தார்பாயால் மூடி 2 நாட்களாக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல்மூட்டைகள் லாரிகளில் ஏற்றி செல்லப்படுகிறது. ஆனால், பள்ளிப்பட்டு பகுதிக்கு லாரிகளை அனுப்பிவைப்பதில் காலதாமதப்படுத்துகின்றனர். இதனால், நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலையில் ஊழியர்கள் உள்ளனர். டிராக்டர்களில் நெல் மூட்டைகள் காத்திருப்பதால், ஒரு நாள் டிராக்டர் வாடகை ரூ.1,000 கூடுதலாக செலுத்த வேண்டி உள்ளது. மழை பெய்து வருவதால், காலதாமதமின்றி நெல்மூட்டைகளை எடுத்துச் செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.