புழல், நவ.18: சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு செல்லும் உபரிநீர் கால்வாய் முறையாக தூர் வாராததால் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பங்கு வகித்து வரும் 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 624 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 14.16 அடி உயரத்தில் நீர்மட்டம் உள்ளது. ஏரிக்கு 27 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ரூ.40 கோடி மதிப்பீட்டில் ஏரிக்கரை பலப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏரிக்கரை சாலை முழுவதும் கரைகள் உள்வாங்கி சாலைகள் சேதமடைந்து உள்ளன.
ஏரிக்கரை சேதம் காரணமாகவும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோழவரம் ஏரியிலிருந்து நேற்று முன்தினம் முதல் கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்டு வந்த 200 கன அடி உபரிநீர் நேற்று 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முறையான முன்னறிவிப்பு ஏதும் இன்றியும், உபரிநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாமலும் உபரிநீர் திறக்கப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கால்வாய் புதர்மண்டி கிடப்பதால் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் முழுவதும் ஆற்றுக்கு செல்லாமல் கால்வாயில் இருந்து வெளியேறி விளை நிலங்களை மூழ்கடித்துள்ளதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாழாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே, தமிழ்நாடு அரசு நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும், உபரிநீர் செல்லும் கால்வாயை முறையாக தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


