பள்ளிப்பட்டு, அக்.18: பள்ளிப்பட்டு அருகே, கிருஷ்ணமராஜகுப்பம் ஊராட்சி, கன்னிகாம்பாபுரம் தெலுங்கு காலனி கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், முதியோர் என 10க்கும் மேற்பட்டோர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வாந்தி, வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் அக்கிராமத்தைச் சேர்ந்த முனியம்மா(50), ரேவதி(45), ராணியம்மாள்(55), சரோஜா(75), சின்ன ரோசய்யா(65), சம்பூர்ணம்(65), பிந்து(24), ஸ்ருதி(17) உட்பட 8 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் வழங்கப்பட்டு வரும் பைப் லைன்கள் கழிவுநீர் கால்வாயில் உள்ளதாகவும், ஓரிரு இடங்களில் பைப் லைன்களில் கசிவு ஏற்பட்டு கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. கிராமத்தில் சிறுவர்கள் முதல் முதியவர் வரை பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதால், கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குடிநீர் டேங்க், பைப் லைன்கள் முறையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement