Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நீர்வரத்து அதிகரிப்பால் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 4500 கன அடி உபரிநீர் திறப்பு

திருவள்ளூர், அக்.17: பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 4500 கன அடியாக அதிகரித்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 34.58 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த, நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 36 அடி. இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. நேற்று காலை நிலவரப்படி கொள்ளளவு 3000 மில்லியன் கன அடியாக உள்ளது.

தற்போது, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை, ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணை மற்றும் நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரத்து கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என 1900 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், நீர்த்தேக்கத்தின் இருப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரிநீரை நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் 7 மற்றும் 10 ஆகிய 2 ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 700 கனஅடி நீர் திறந்து விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் வினாடிக்கு 1500 கனஅடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து, 9 மணியளவில் 4500 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் வினாடிக்கு 700 கன அடி வீதமும் நீர் அனுப்பப்பட்டு வருகிறது. நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக அதிகரித்து திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

500 கன அடி வெறியேற்றம்

புழல்: கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், புழல் ஏரி நிரம்பி வருகிறது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் புழல் ஏரியிலிருந்து 200 கனஅடி நீர் மதகு வழியாக திறந்து விடப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தால், 200 கனஅடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டு, மதகு வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

2000 கனஅடி தண்ணீர் திறப்பு

ஊத்துக்கோட்டை: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதால் நேற்று வினாடிக்கு 4,500 கன அடி வீதம் தண்ணீர் கொசஸ்தலையாற்றில் கூடுதலாக திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் சேமிக்கப்பட்டு நேற்று காலை வினாடிக்கு 2000 கன அடி வீதம் 6 மதகுகள் வழியாக சோழவரம் ஏரிக்கு திறக்கப்பட்டது. மேலும், பூண்டி ஏரி நிரம்பிய காரணத்தால், கொசஸ்தலையாற்றில் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமரைபாக்கம் முதல் சோழவரம் வரை கால்வாய் ஓரங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவர் என கரையோர விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.