புழல், அக்.17: செங்குன்றம் அடுத்து பிள்ளையார் கோயில் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில், ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இத்தெரு வழியாக தான் நடை பயிற்சிக்கு செல்வோரும், பள்ளி செல்லும் மாணவிகளும் சென்று வருகின்றனர். இதனுடைய தெருவின் நடுவில் பேரூராட்சி கட்டுப்பாட்டில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. அதனைச்சுற்றி வீட்டில் உள்ள குப்பைகளை சிலர் வீசி செல்வதால், தெருநாய்களின் எண்ணிக்கையும், தொல்லையும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டு வருகிறது. இதனால், நடைபயிற்சிக்கு செல்வோர் மற்றும் பணிக்கு செல்வோர்களையும், அத்தியாயவசிய பொருட்கள் வாங்க செல்வோரையும் அந்த தெருவில் உள்ள தெரு நாய்கள் ஒவ்வொருவரையும் கவ்வி பிடித்து கடித்து வருகிறது.
இதில் பலருக்கு கால், முதுகு பகுதிகளில் நாய்க்கடி ஏற்பட்டு, அருகில் உள்ள நாரவாரிகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கினர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெருநாய்கள் தொல்லையால் பாதிப்படையும் அப்பகுதி மக்கள், இதுகுறித்து பலமுறை நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.