புட்லூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மாணவர்கள் அவதி: விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருவள்ளூர், அக்.16: புட்லூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் காரணமாக அவதிக்குள்ளாகும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உயிர் பயத்துடன் செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால், மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கால்வாய் அடைப்புகளை சீரமைத்தல், கால்வாய்களில் குப்பை தேங்கியிருப்பதை அப்புறப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உள்ள உல்லாச நகர் பகுதியில் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனால், இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடியவர்கள், வேலைகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவிகள் ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த லேசான மழைக்கே இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிசெல்ல வேண்டிய சூழ்நிலை நிலை உள்ளது. தற்போது, இந்த சுரங்கப்பாதையில் மழை நீரானது அதிகமாக தேங்கி நிற்பதால் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள், வேலைக்குச் செல்லக்கூடிய பொதுமக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த தண்ணீரில் செல்வதால் பழுதடைந்து விடுகிறது. இதனால், பெண்கள் தங்களுடைய வாகனத்தை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சுரங்கப் பாதையில் தண்ணீர் இருப்பதால் சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள இருப்புப் பாதையை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. தொடர்ந்து, இங்கு தேங்கி நிற்கும் தண்ணீரினால் விஷப்பூச்சிகள் வருகின்றன. இதனால், மாணவர்கள் பயந்த நிலையில் அதை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எனவே, உடனடியாக சுரங்க பாதையில் உள்ள நீரை வெளியேற்றி சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று உல்லாச நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டு மழை காலத்திலும் இது போன்ற நிலை இருப்பதாக தொடர்ந்து புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இனிமேலாவது இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.