Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மணலியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்பில் 25 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

மாதாவரம், அக்.16: மணலியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். சென்னை மணலி சடையன்குப்பம் மற்றும் பர்மாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலையில், தனியார் சிலர் அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தி வருதோடு, பிளாட்டுகளாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மணலி மண்டல அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, உதவி ஆணையர் தேவேந்திரன், உதவி பொறியாளர் விஜய் ஆகியோர் கொண்ட குழுவினர் சடையன்குப்பம் பர்மா நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் அரசு மேய்கால் புறம்போக்கு நிலம், தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் ஒரு பகுதியை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். மேலும், 3 இடங்களில் அரசு நிலம் என்ற அறிவிப்பு பலகை வைத்தனர். மேலும், மீட்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமைக் காடு அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் மீட்கப்பட்ட அரசு நிலத்தில் வைத்திருந்த அறிவிப்பு பலகையை அகற்றிச் சென்றனர். அரசின் அறிவிப்பு பலகையை அப்புறப்படுத்திய மர்ம நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். சடையன்குப்பம் பர்மா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அரசு அறிவிப்பு பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உதவி பொறியாளர் விஜய் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.