திருத்தணி, செப்.16: திருத்தணி முருகன் கோயிலில் 26 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் ரூ.1.47 கோடி செலுத்தி இருந்ததாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் நகை, பணம், பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கிருத்திகை முடிந்த நிலையில் எண்ணப்பட்டு கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 26 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திருக்கோயில் இணை ஆணையர் ரமணி தலைமையில் நேற்று நடந்தது. திருக்கோயில் அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, உஷா ரவி, நாகன் ஆகியோர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணி நிறைவில் ரொக்கமாக ரூ.1.43 கோடி. திருப்பணி உண்டியல் காணிக்கை ரூ.4.44 லட்சம் என மொத்தம் 1 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து 49 ரூபாய் ரொக்கம், 732 கிராம் தங்கம், 16,330 கிராம் வெள்ளி காணிக்கை வசூலானதாக கோயில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement