மாதவரம், அக்.14: கோயம்பேடு மார்க்கெட்டில் 1900க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காய்கறிகளை அனுப்பும் உழவர்களும், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தீபாவளிக்கு அடுத்த நாளான 21ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் ஒருங்கிணைந்த அனைத்து கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், வியாபாரிகள் கலந்துகொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான 21ம் தேதி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை விடுவதற்கு முடிவு எடுத்தனர்.
இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் ஒருங்கிணைந்த அனைத்து கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் கூறுகையில், ‘விவசாயிகள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால், அன்று காய்கறிகளை பறித்து அனுப்பும் பணிகள் நடைபெறாது. லாரி ஓட்டுநர்களும் தங்கள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். அதன் காரணமாக தீபாவளிக்கு அடுத்த நாளான 21ம் தேதி காய்கறிகள் மார்க்கெட்டிற்கு காய்கறி வராது. அதனால் 21ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,’ என்றார்.