Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மெட்ரோ ரயில் பணியால் சிதிலமடைந்த மவுண்ட் - பூந்தமல்லி, ஆற்காடு சாலையை ரூ.8.64 கோடி மதிப்பில் சீரமைக்க முடிவு: நெடுஞ்சாலைத்துறை தகவல்

பூந்தமல்லி, செப்.14: மெட்ரோ ரயில் பணியால் சிதிலமடைந்த மவுண்ட் - பூந்தமல்லி, ஆற்காடு சாலையை ரூ.8.64 கோடி மதிப்பில் சீரமைக்க முடிவு செய்துள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. தொலைவு 488 பேருந்து சாலைகளும், 5,653.89 கி.மீ. தூரம் கொண்ட 35,978 உட்புற சாலைகளும் உள்ளன. அவற்றில் குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ, மின்சார வாரியம் ஆகியவற்றின் பணிகளுக்காக 2,995 சாலைகள் 479.41 கி.மீ. தொலைவுக்கு சேதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சேதமான சாலைகள் அவ்வப்போது பெய்யும் மழையால் சேறும் சகதியுமாகி போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அத்துடன் முக்கிய சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், மாநகராாட்சி சார்பில் ரூ.489.22 கோடியில் சாாலைகளை சீரமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, குடிநீர் வடிகால் வாரிய பணிகளுக்காக சேதமடைந்த 2,976 கி.மீ. சாலைகளில் 476.89 கி.மீ. தூரம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரத் துறை பணிகளுக்காக தோண்டப்பட்ட 4.72 கி.மீ. தொலைவு சாலைகளில் 2.52 கி.மீ. சாலை சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் மொத்தம் 479.41 கி.மீ. சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து சாலைகளையும் வரும் அக்டோபருக்குள் மழை தொடங்கும் முன்பே சீரமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் 2 முக்கிய சாலைகள் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வசமிருந்து மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆற்காடு சாலை, மவுண்ட் - பூந்தமல்லி சாலை ஆகியவற்றை மெட்ரோ பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டு பெற்றது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் பல இடங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.

இந்த 2 சாலைகளும் நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால், சீரமைக்கும் பொறுப்பும் மாறியிருக்கிறது. தற்போது சீரமைப்பிற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. உதாரணமாக பூந்தமல்லியில் இருந்து எஸ்.ஆர்.எம் மெடிக்கல் கல்லூரி வரையிலான சாலை சேதமடைந்து காணப்படுவதால் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, ஆற்காடு சாலை மற்றும் மவுண்ட் - பூந்தமல்லி சாலையை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில், சாலைக்கு நடுவே அமைந்துள்ள சென்டர் மீடியன் பகுதியும், சாலை தடுப்புகளும் சீரமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஆற்காடு சாலையில், 1.4 கிலோ மீட்டர் தூரம் ரூ.3.44 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், மவுண்ட் - பூந்தமல்லி சாலை 800 மீட்டர் தூரம் ரூ.5.20 கோடியில் சீரமைக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் சென்னை மாநகரில் சிதிலமடைந்துள்ள மற்ற சாலைகளையும் விரைந்து சீரமைத்து, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.