நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு இந்தியாவின் சிறந்த ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலாபுரம் தேர்வு
திருத்தணி, நவ.12: தேசிய அளவில் நீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடுகள் மூலம் சிறந்த ஊராட்சிக்கான தேசிய விருதுக்கு பாலாபுரம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நீர்வளத்துறை சார்பில், 2024ம் ஆண்டுக்கான மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு 6வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சி தேசிய அளவில் 3வது சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. புது டெல்லியில் வரும் 18ம் தேதி ஒன்றிய நீர்வளத்துறை சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தேசிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. தேசிய அளவில் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட பாலாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.வி.தென்னரசு கூறுகையில், மலை சார்ந்த பாலாபுரம் பகுதியில் மழை பொழிவு குறைவாக இருந்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
மேலும், பயிர் சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும்பாலான விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலையில் இருந்தனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு முடிய எங்கள் ஊராட்சியில் உள்ள மலை முழுவதும், அரசு அலுவலர்கள் ஊக்கத்துடன் சுமார் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மூலம் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தோம்.
இதனை பார்த்த, அப்போதைய கலெக்டர் ஆழ்துளை கிணறு அமைத்து பைப் லைன் மூலம், தண்ணீர் மலைக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்தார். இதனால், கிராமம் பசுமை வனமாக மாறியது. மலையில் நடப்பட்ட செடிகள் வளர்ந்து காய்கறிகள், பழங்கள் தருகிறது. மேலும், நீர் மேலாண்மை உறுதிப்படுத்தவும், மழை நீர் வீணாவதை தடுக்க கிராமத்தில் 20 பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு மழைநீர் வீனாகாமல் சேகரிக்கப்பட்டது. மேலும், மலையில் நீர் சேமிக்க பக்கவாட்டு குழி அமைக்கப்பட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து மழை பொழிவு அளவு உயர்ந்து பசுமையாக உள்ளது. கிராம மக்கள் அனைவரின் ஆதரவுடன் தங்கள் ஊராட்சிக்கு தேசிய அளவில் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
