பூந்தமல்லி, செப்.12: வளசரவாக்கத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அதிகாரி உள்பட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் அஜீஸ். இவர் அதே பகுதியில் புதிதாக அழகு நிலையம் தொடங்குவதற்காக தீயணைப்புத்துறை சான்றிதழ் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து மேல் நடவடிக்கை எடுத்து சான்றிதழ் வழங்க ராமாபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோவன் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கூறியதாகவும், பின்னர் ரூ.10 ஆயிரமாக குறைத்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அஜீஸ், சென்னை நகர ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் அளித்தார்.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அஜீஸிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று கொடுத்து அனுப்பினர். இளங்கோ அறிவுறுத்தலின் பேரில் தீயணைப்பு வீரர் முனுசாமி என்பவரிடம் லஞ்சப் பணம் ரூ.10 ஆயிரத்தை அஜீஸ் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் தீயணைப்பு துறை அதிகாரி இளங்கோவன் மற்றும் தீயணைப்பு வீரர் முனுசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தீயணைப்பு நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.