திருவள்ளூர், அக்.11: திருவள்ளூரில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டத்தில், பேரிடரை எதிர்க்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆவடி நா.மு.நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரதாப், திருவள்ளுர் எம்பி சசிகாந்த் செந்தில், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, ச.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு, அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி, ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
பின்னர், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நிருபர்களிடம் கூறியதாவது: ‘வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, கடந்த 2015ல் ஏற்பட்ட பேரிடர், அது இயற்கை பேரிடர் என்பதை விட செயற்கை பேரிடர். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் ஒருமுறை ஏற்படக்கூடாது என்பதற்காக தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு கூட்டத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். கடந்த, ஆட்சி காலத்தில் 34 செ.மீ. மழையிலேயே எவ்விதமான முன் அறிவிப்பின்றி இரவோடு இரவாக 29 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டதின் விளைவு, சென்னையினுடைய பல பகுதிகளில் ஏறக்குறைய 1.5 லட்சம் கால்நடைகளுக்கு பாதிப்பும், 18 லட்சம் பேர் இடம் பெயரும் சூழ்நிலையும் ஏற்பட்டு, ஒரு லிட்டர் பால் ரூ.180க்கும், ஒரு பிரட் ரூ.180க்கும் விற்பனை செய்யக்கூடிய நிலை இருந்தது.
அந்நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையில் ஆட்சி அமைந்த காலத்திலிருந்து பேரிடர் மேலாண்மை கூட்டத்தைக் கூட்டி அதன் அடிப்படையில் 2023ம் ஆண்டு, கிட்டதட்ட 43 செ.மீ. அளவுக்கு மழை பெய்தும், 36 மணி நேரத்தில் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு எவ்விதமான இடர்பாடுகளும் இல்லாமல் சரியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதேபோன்று, வருகின்ற பேரிடரையும் எதிர்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகராட்சி ஆணையர் சரண்யா, பொன்னேரி சப் கலெக்டர் ரவிகுமாக், ஆவடி மாநகர காவல் துணை ஆணையர்கள் பெரோஸ் கான் அப்துல்லா, பாலாஜி, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர், இணை இயக்குநர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேல், அனைத்து துறைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.