திருவள்ளூர், அக்.11: திருவள்ளூர் அடுத்து குத்தம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, ஓய்வூதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 4வது நாளாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், குத்தம்பாக்கம் கூட்டுறவு வங்கி அருகே 50க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட செயலாளர் பி.எஸ்.தியாகராஜன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க வகைபாடு இல்லாமல் அனைவருக்கும் 20 சதவிகிதம் ஊதிய உயர்வு, 2021 முன்பு, பின்பு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கருணை ஊதியம் உயர்த்திட வேண்டும், ஓய்வூதியம், பணி நிரந்தரம், முதல்வர் மருந்தகத்தில் விற்பனையை கட்டாயப்படுத்தக் கூடாது, தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடிசென்று பொருட்கள் விநியோகிக்கும் விற்பனையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.750 முதல் ரூ.1000 வரை வழங்க வேண்டும், அங்காடிகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்களுக்கு புளுடூத் முறை உள்ளது போல் உள்வரும் பொருட்களுக்கும் புளுடூத்தில் இணைக்கப்பட வேண்டும். பட்டப்படிப்பும், பட்ட மேற்படிப்பும், பொறியியல் பட்டமும் பெற்று தகுதியும் திறமையும் கொண்டவர்களுக்கு மாநில மைய கூட்டுறவு வங்கிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பும்போது 20 சதவிகிதம் ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டுறவு சங்க ஊழியர்களின் 5வது நாள் ஆர்ப்பாட்டத்தால் விவசாய கடன், தங்க நகை கடன் பெற முடியாமலும், பொது விநியோகத் திட்டம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.