கும்மிடிப்பூண்டி, அக். 10: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டி (48). காந்திநகர் சாய்பாபா கோயில் எதிரே இவருக்குச் சொந்தமான சிமென்ட் ஓடு போட்ட 2 அறைகள் கொண்ட வீடு உள்ளது. இந்த வீட்டில் பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 8 வாலிபர்கள் வாடகைக்கு தங்கியிருந்தனர். மற்றொரு அறையில் விஜயா (60) என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வடமாநில வாலிபர் ஒருவர் கை துண்டிக்கப்பட்டு, உடலில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் கோட்டிக்கு, விஜயா தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர்.
இதில், கொலை செய்யப்பட்ட நபர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த திமாந்திர தாஸ் (21) என தெரியவந்தது. மேலும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் லால் ஹர்சன் என்பவர் திமாந்திர தாஸை, கத்தியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் திமாந்திர தாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய கொலையாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த கார்த்திக் லால்ஹர்சனை தனிப்படை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, கார்த்திக் லால் ஹர்சன் வேறு ஒரு கும்பலைச் சேர்ந்த 4 பேர் திமாந்திர தாஸை வெட்டியதாகவும், அதனை, தான் தடுக்க முயன்றதாகவும் போலீசாரிடம் கூறினான். அவன் கூறியதன் பேரில் 4 பேர் கொண்ட கும்பலையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.