Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடும் ரயிலில் பயணிக்கு வலிப்பு: ரயில்வே போலீசார் மீட்டு காப்பாற்றினர்

திருவள்ளூர், செப்.9: சென்னையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற விரைவு ரயிலில் திடீர் வலிப்பு நோயால் அவதிப்பட்ட பயணியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.

சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட திருவனந்தபுரம் விரைவு ரயில் திடீரென திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அவசர அவசரமாக சென்று விசாரித்தனர். அப்போது, சென்னையிலிருந்து புறப்பட்டு ஆவடி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த ரயிலில் பயணித்த உத்பால் மண்டல் என்ற பயணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, வலிப்பு நோயால் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக அவசர சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். இதனால் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையில் போலீசார், உடனடியாக பயணியை மீட்டு ஆட்டோ மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்து குணப்படுத்தியதால் அவரது உறவினர்கள், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.