கொசஸ்தலை ஆற்றின் ஆந்திர பகுதியில் மணல் அள்ள அனுமதி நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்: விவசாயிகள் கவலை தடுப்பணை கட்ட கோரிக்கை
திருத்தணி, ஆக. 9: கொசஸ்தலை ஆற்றில் தங்கு தடையின்றி ஆந்திர அரசு ஆற்று மணல் அள்ளுவதால், தமிழக கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க எல்லைப்பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, எல்லையோர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட மக்களின் பிரதான நீராதாரமாக கொசஸ்தலை ஆறு விளங்குகிறது. பள்ளிப்பட்டு பகுதியில் கொசஸ்தலை ஆறு தனது பயணத்தை தொடங்கி, ஆந்திர மாநிலம் நகரி வழியாக திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பாய்ந்து, பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது.
ஆற்றின் கரையோர கிராம மக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆற்றுப்படுக்கை பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்காத நிலையில், ஆந்திராவில் மணல் எடுத்துச்செல்ல அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கொசஸ்தலை ஆற்றில் தங்கு தடையின்றி மாட்டு வண்டிகள், டிராக்டர்களில் மணல் அள்ளப்படுகிறது.
பள்ளிப்பட்டு அருகே தமிழக எல்லையில் அமைந்துள்ள ஆந்திர மாநில பகுதிகளான சத்திரவாடா, நகரி ஆகிய பகுதிகளுக்கு தினம்தோறும் 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் செல்கின்றனர். ஆந்திரா பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் 10 அடி ஆழத்தில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மழை காலங்களில் தமிழக எல்லையில் தடுப்பணைகள் இல்லாததால், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, வெள்ளத்துடன் ஆற்று மணல் அடித்துச் செல்லப்பட்டு, ஆந்திரா பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட பள்ளம் மீண்டும் மணல் திட்டாக மாறி தமிழக பகுதியில் ஆறு சுமார் 5 அடிக்கு தாழ்வாக காணப்படுகிறது.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்க முடியாமல் வீணாவதோடு, கோடை காலங்களில் விளை நிலங்களுக்கான நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயப் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கைவிடுக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கொசஸ்தலை ஆறு செல்லும் ஆந்திர மாநில பகுதிகளில் ஆற்றில் தடையின்றி இயற்கை வளம் சூறையாட படுவதை தடுக்கவும், தமிழக கிராமங்களில் குடிநீர் மற்றும் விளை நிலங்களுக்கான நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், புண்ணியம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்மூலம் ஆந்திர எல்லையில் அமைந்துள்ள புண்ணியம், சாமந்தவாடா, அரவாசபட்டடை, ஞானம்மாள் பட்டடை, கரிம்பேடு குமாரமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள் பயன்பெறும் என்றனர்.
கரிம்பேடு மேம்பாலம் பலவீனமடையும் அபாயம்
தமிழக எல்லையில் கொசஸ்தலை ஆற்றில் அளவை மீறி, ஆந்திர அரசு அனுமதியுடன் மணல் அள்ளப்படுவதால், 10 அடிக்கு மேல் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் மணல் அடித்து செல்லும்போது, கரிம்பேட்டில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள உயர்மட்ட மேம்பாலம் அடிப்பகுதி பலவீனமடைந்து விபத்து அபாயத்தில் உள்ளது. பசுமை தீர்பாயத்தின்படி எல்லைப் பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கவும், மழைநீரை சேமிக்கவும், மணல் அடித்துச் செல்லப்படுவதை தடுக்கவும் தடுப்பணை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றூ விவசாயிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.