Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் 14ம் தேதி தெப்பத்திருவிழா சரவண பொய்கை குளம் நிரம்ப வருண பகவான் கருணை கிடைக்குமா? முருக பக்தர்கள் எதிர்ப்பார்ப்பு

திருத்தணி, ஆக. 9: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி வரும் 14ம் தேதி தெப்பத்திருவிழா தொடங்க உள்ள நிலையில் சரவண பொய்கை குளம் நிரம்ப வருண பகவான் கருணை கிடைக்குமா? என்று முருக பக்தர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பெற்ற ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வரும் 14ம்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில், சிறப்பு பெற்ற ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வரும் 16ம்தேதி நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோயிலில் குவிந்து, சாமி தரிசனம் செய்து காவடிகள் செலுத்த உள்ளனர்.

சரவண பொய்கை திருக்குளத்தில் 3 நாட்கள் நடைபெறவுள்ள தெப்பத் திருவிழாவிற்கு தெப்பம் கட்டும் பணிகள் நேற்று தொடங்கியது.

கடந்த 3 ஆண்டுகளாக முருகன் கோயிலுக்கு சொந்தமான சரவண பொய்கை திருக்குளத்தில் பக்தர்கள் வீசும் வெள்ளம் மற்றும் மலர்மாலைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களால் குளம் முழுவதும் பாசி படர்ந்து, துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் குளிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, கோயில் நிர்வாகத்தின் பெரும் முயற்சியால், உபயதாரர்கள் நிதி உதவியுடன் ரூ.25 லட்சத்தில் குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக திருத்தணியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், மலையிலிருந்து வந்த மழைநீர் வெள்ளத்தால் ஓரவுளவிற்கு குளம் நிரம்பியுள்ளது. இருப்பினும், தெப்ப குளத்தை சுற்றி வரும் அளவிற்கு தண்ணீர் நிரம்பாததால், தெப்பத்திருவிழா தடையின்றி நடைபெறுவதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

மழை பெய்தால் மட்டுமே குளம் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. சரவண பொய்கை குளம் தூர்வாரி சீரமைக்கபட்டுள்ள நிலையில், தற்போது குளத்தில் 4 படிகள் உயரத்தில் மட்டுமே தண்ணீர் உள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் குளித்து, காவடிகளுக்கு பூஜை செய்வார்கள். குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளதால் தெப்பத்தில் இருந்தபடி முக்கிய பிரமுகர்கள், கோயில் ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள நிலையில், தெப்பம் பாரம் தாங்காமல் தரை தட்டும் நிலையில் உள்ளதால் தெப்பத்திருவிழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. அடுத்து, வரும் 5 நாட்களில் தொடர்ந்து மழை பெய்தால், குளம் நிரம்பி தெப்பத் திருவிழா தடையின்றி நடைபெறும் என்று தெப்பம் இழுக்கும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

உபயதாரர்கள் நிதி உதவியுடன் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமீபத்தில் குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்ட நிலையில், தற்போது குளத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துள்ளது. பக்தர்கள் குளிக்கும் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். குளத்தையும், அதில் தேங்கும் நீரையும் தூய்மையாக பராமரிக்க கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.