ஆழ்துளை கிணறுகள் அமைத்து கொசஸ்தலை ஆற்றில் இருந்து திருத்தணி கோயிலுக்கு குடிநீர்: ஆய்வுக்குப்பின் கலெக்டர் தகவல்
திருத்தணி, அக்.8: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நாளுக்குநாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் மேம்படுத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, முழுநேர அன்னதான கூடம் விரிவுபடுத்துதல், வாகன நிறுத்துமிடம், ராஜகோபுரம் தேர் வீதி இணைப்பு, படிகள் அமைக்கும் பணி, பூஜை பொருட்கள் விற்பனை, கடைகள் புதிதாக கட்டுவது, பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 9 நிலை ராஜகோபுரம் தேர்வு வீதி இணைப்பு படிகள் அமைக்கும் பணிகள், அன்னதான கூடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்தும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், திருத்தணி முருகன் கோயிலில் ரூ.103 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மலையில் பாறைகள் உள்ளதால் கடும் சவாலாக இருந்தாலும் கோயில் நிர்வாகம் மற்றும் பணியாளர்களின் கடும் முயற்சியால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயிலில் குடிநீர் தேவை அதிகரிக்கும் வகையில் கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மலைக் கோயிலுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மலைக்கோயில் முழுவதும் குடிநீர் இணைப்பு மற்றும் கழிப்பறைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக, கோயில் நிர்வாகத்துடன் கலந்து ஆலோசனை செய்து பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார். அப்போது, கோயில் அறங்காவல் குழு தலைவர் தரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ் பாபு, உஷாரவி, மோகனன், நாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.