Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடிக்க பணம் தராததால் தகராறு மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர், ஆக. 8: பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). இவருக்கும் பாக்கியலட்சுமி என்பவருக்கும் கடந்த 2006ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் நாள்தோறும் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் ஊர்சுற்றி வந்துள்ளார். மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2012 டிசம்பர் மாதம் 17ம் தேதி இரவு குடிக்க பணம் கேட்டு மனைவி பாக்கியலட்சுமியுடன் சுரேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மனைவி பணம் இல்லை என்று சொன்னதால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து பாக்கியலட்சுமி மீது ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார். இதில் பாக்கியலட்சுமி உயிரழந்தார். அப்போது போலீசாருக்கு அளித்த மரண வாக்குமூலத்தில் தனது கணவர் குடிக்க பணம் கேட்டு தராததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சி செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கே.அமுதா லவக்குமார் ஆஜராகி வாதாடினார்.

இந்நிலையில் சுரேஷ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகாததால் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்து வைத்து நீதிமன்ற விசாரணை நடைபெறும் போதெல்லாம் அவரை புழல் சிறையிலிருந்து அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்து வந்தனர். இந்த வழக்கில் 2015 முதல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தநிலையில் மகிளா நீதிபதி ரேவதி நேற்று இறுதி விசாரணை முடித்து தீர்ப்பளித்தார். அப்போது மனைவியை கொடுமைப்படுத்தியதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரேவதி தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின் சுரேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.