புழல், ஆக. 8: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜய ஆகியோர் கடந்த ஏப்ரல் 15ந் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷின் தம்பியான இந்திரச்சந்த் என்பவர் கடந்த ஜூன் 7ந் தேதி மர்ம கும்பலால் ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த கடத்தல் வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ, ஏடிஜிபி ஜெயராமிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட சிறுவன் அடையாளம் காட்டும் வகையில் நேற்று அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
கடத்தப்பட்ட சிறுவன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அம்பத்தூர் விரைவு நீதிமன்ற நடுவர் மகாசக்தி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விஜயயின் தந்தை வனராஜ், விருப்ப ஓய்வு பெற்ற காவலர் மகேஸ்வரி, கணேசன், மணிகண்டன், சரத்குமார், சுவீட்குமார், டேவிட் ஆகிய 7 பேர் சிறையில் இருந்த மற்ற கைதிகள் என 20க்கும் மேற்பட்ட கைதிகளை கொண்டு இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்துவதற்காக பிரத்யேகமாக நிறுவப்பட்டுள்ள அறையில் கருப்பு கண்ணாடி போடப்பட்ட அறைக்குள் நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் அமர்த்தப்பட்டு அறையின் வெளியே கைதிகள் ஒவ்வொருவராக அணிவகுப்பு செய்யப்பட்டனர். சுமார் 3 மணி நேரம் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அடையாள அணிவகுப்பு தொடர்பான இந்த அறிக்கை, வழக்கு நடைபெற்று வரும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.