Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறநிலையத்துறை இடத்தில் கட்டிய ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்: சிறுவாபுரியில் பரபரப்பு

பெரியபாளையம், ஆக. 8: சிறுவாபுரி முருகன் கோயில் அருகே அறநிலையத்துறை இடத்தில் கட்டப்பட்ட 5 வீடுகள் உட்பட ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த, கோயிலின் அன்னதான மண்டபத்திற்கு அருகே கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 5 வீடுகள் கட்டப்பட்டு, இதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்த, இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும் என அறநிலையத்துறை அறிவுறுத்திய நிலையில், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அறநிலையத்துறைக்கு சாதகமாக கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 7ம்தேதி (நேற்று) ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கியும் வீடுகளை யாரும் காலி செய்யாத நிலையில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்டவை அங்கு வரவழைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றத் தொடங்கினர்.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்த நிலையில் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். 5 வீடுகள் உட்பட ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த வீடுகளை இடித்து அகற்றியதால், பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையில் கண்ணீர் வடித்தனர். கடன் வாங்கி வீடுகளை கட்டி இருப்பதாகவும், மாற்று இடம் கூட ஒதுக்கி தராமல் வீடுகளை இடிப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இதே முகவரிக்கு அரசு கொடுத்துள்ளதாகவும், மாற்று இடம் ஒதுக்கி தராவிடில் தீக்குளித்து உயிரை விடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியே அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களை டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய இழப்பீடும், மாற்று இடமும் ஒதுக்கி தரவேண்டும் என வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.