அம்பேத்கர் நினைவு நாளில் 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடியில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர், எம்எல்ஏக்கள் வழங்கினர்
திருவள்ளூர், டிச.7: திருவள்ளூர், அம்பேத்கர் நினைவு நாளையொட்டி 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்எல்ஏக்கள் வழங்கினர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, திருவள்ளூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், அம்பேத்கர் நினைவு நாளையொட்டி 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர் பிரதாப், எம்எல்ஏக்கள் திருவள்ளுர் வி.ஜி.இராஜேந்திரன், பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி எஸ்.சந்திரன், கும்மிடிபூண்டி டி.ஜே.கோவிந்தராஜ், பொன்னேரி துரைசந்திரசேகர் ஆகியோர் வழங்கினர். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ப.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.
முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு காணொலி வாயிலாக மின்னனு திரையில் நேரலையில் திரையிடப்பட்டதை மாவட்ட கலெக்டர், எம்எல்ஏக்கள் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டனர். பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், வருவாய் துறை, முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய துறைகள் சார்பில், 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம், பட்டா, கல்விக்கடன், சுய தொழில் கடன், மகளிர் சுய உதவிக்குழு வங்கி கடன் இணைப்பு, இயற்கை பேரிடர், இறப்பு நிவாரணம் ஆகிற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் 750 நபர்களுக்கு சமத்துவ உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், இணை இயக்குநர் வை.ஜெயக்குமார், நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர்கள் திருவள்ளூர் செல்வம், திருத்தணி வெண்ணிலா, பொன்னேரி சித்ரா, இளநிலை பொறியாளர் குமார், கண்காணிப்பாளர் மோகன் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.


