Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேடங்கி நல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம் : விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது

திருவள்ளூர், டிச.7: திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேடங்கி நல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டமாக விளங்கி வருகிறது. அரசு சட்டக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரிகள், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், அரசு நிதிநாடும் மேல்நிலை பள்ளிகள் என அதிகளவில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் திருவள்ளூருக்கு பொதுமக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பதி, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரும்புதூர், அரக்கோணம் உள்பட பிற நகரங்களில் இருந்தும் ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன. தற்போது திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, பெரும்புதூர் திருப்பதி, அரக்கோணம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை, திருத்தணி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 80 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சென்னை மாநகரப் பேருந்துகள் திருவள்ளூர் வந்து, அங்கிருந்து ஆவடி, பூந்தமல்லி, கோயம்பேடு, தியாகராய நகர், செங்குன்றம், மந்தவெளி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 80 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல் 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும், திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன.

இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவள்ளூருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளில் வந்து செல்கின்றனர். அதேபோல் திருவள்ளூரில் இருந்து சென்னை உள்பட பிற மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர். இதனால், திருவள்ளூர் நகரில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை எப்பொழுதும் போக்குவரத்து நெரிசலாகவே உள்ளது. அது மட்டுமல்லாமல் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையும் குறுகிய சாலையாக இருப்பதால், காலை நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்களும், வேலைகளுக்கு செல்பவர்களும் மாலை நேரத்தில் பள்ளி விடும்போது போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கமும், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் அவ்வழியாக செல்லும் அனைவருக்குமே ஏற்படுவதுண்டு. அதேபோல் நகரின் மையப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியபடியே நாள்தோறும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் காலை, மாலை நேரங்களில் நாள்தோறும் படிக்கட்டுகளில் தொங்கியபடியே மாணவர்கள் செல்லும் நிலையும் உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து பள்ளிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பஜார் வீதிக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என பெரும்பாலானோர் ஆட்டோவில் பயணிக்கின்றனர். இதனால் 300 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் திருவள்ளூர் நகரில் காலை முதல் இரவு வரை இயங்குவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் நகரமன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் ஆகியோர் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வேடங்கிநல்லூர் என்ற பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என திமுக தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து, அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2023 ஜூலை மாதம் ரூ.33 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்த பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் வந்து, நின்று, செல்வதற்கு எதுவாக தீவிரமாக அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வணிக வளாகங்களும், போக்குவரத்து அலுவலகம் ஆகியவை கட்டும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ கூறியதாவது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உத்தரவின்பேரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதனால் திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துகளும் முற்றிலும் குறையும் என தெரிவித்தார்.