அய்யப்பன்தாங்கலில் ரூ.19 கோடியில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி விறுவிறு: அமைச்சர்கள் ஆய்வு விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
பூந்தமல்லி, அக்.7: அய்யப்பன்தாங்கலில் ரூ.19 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடித்து, புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் மாநகரப் பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் 1994ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. அய்யப்பன்தாங்கல் சுற்று வட்டாரப் பகுதிகளின் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் பேருந்து நிலையத்தை நவீன முறையில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது.1.5 ஏக்கர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைய உள்ள இந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மேலும், கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது இ.கருணாநிதி எம்எல்ஏ, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் மற்றும் முதன்மைச் செயலாளர் பிரகாஷ், தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம், ஒன்றிய பொருளாளர் ராஜா தேசிங்கு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜனார்த்தனன், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதேபோல், சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியில் இருந்து ஆலந்தூர் 163வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணாபுரத்தில் ரூ.12 கோடியில், கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டிடம் மற்றும் ஆலந்தூர் 160வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெருவில் ரூ.16 கோடியில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டப பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.