திருத்தணியில் ரூ.6.50 கோடி மதிப்பில் ராஜகோபுரம் - தேர்வீதி இணைப்பு பணிகள் தீவிரம்: பக்தர்கள் மகிழ்ச்சி
திருத்தணி, அக்.7: திருத்தணி முருகன் கோயிலில் ரூ.6.50 கோடியில் ராஜகோபுரம் தேர்வீதி இணைப்பு படிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படுவது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலில், கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, 9 நிலை ராஜகோபுரம் பணிகள் தொடங்கியது. 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்றது. கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பின்னர் ராஜகோபுரம் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ராஜகோபுரம் தேர் வீதி இணைப்பு படிகள் அமைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாஸ்டர் பிளான் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் தேர் வீதி இணைப்பு படிகள் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தால், பக்தர்கள் எளிதாக ராஜகோபுரம் வழியாக தேர் வீதி வந்தடைந்து, சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் இணைப்பு படிகள் அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேர் வீதி ராஜகோபுரம் இணைப்பு படிகள் அமைக்கும் பணிகள் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.