புழல், டிச.5: தொடர் மழை காரணமாக, மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம், வடசென்னை கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், தீர்த்தங்கரையம்பட்டு, குமரன் நகர், விளாங்காடுப்பாக்கம், தர்காஸ், கண்ணம்பாளையம், சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருகளில் மழைநீர் தேங்கி, ஆங்காங்கே குளம்போல் காட்சி அளிக்கிறது.
இந்நிலையில், புழல் ஏரிலிருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் மற்றும் புழல் எம்ஜிஆர் நகரில் உள்ள மாதவரம் ரெட்டேரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அருகில் உள்ள புழல் அண்ணா நகர், ராகவேந்திரா அவன்யூ, பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், மாதவரம் சின்ன ரவுண்டானா முதல் வடபெரும்பாக்கம் செல்லும் மாதவரம் நெடுஞ்சாலையில் இடுப்பளவில் மழைநீர் தேங்கி, போக்குவரத்துக்கு செல்ல முடியாமல் அவலநிலை உள்ளது. இதில், பைக்குகளில் செல்பவர்கள் தண்ணீரில் சிக்கிக்கொண்டு, வாகனங்களை தள்ளி செல்லும் அவலநிலை நீடிக்கிறது.
இதேபோல், பல்வேறு நகர் பகுதிகளில் உள்ள வீடுகள் முன்பு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வீடுகளில் உள்ள பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அவர்கள் வைத்திருக்கும் கார்களை புழல் பாலாஜி நகர், காந்தி பிரதான சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மழைநீர்கள் புழல் பாலாஜி நகரில் உள்ள மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம், வடசென்னை கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய அலுவலகம் முன்பு மழைநீர் சூழ்ந்து, குளம்போல் உள்ளது. இதனால், இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மழை நீரில் கடந்து செல்வதால், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்; வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்து வரும் மழையால் ஆண்டுதோறும் மழைநீர். குறிப்பாக புழல் ஏரி உபரிநீர் மற்றும் ரெட்டேரி உபரிநீர் வெளியேற்றும்போது, மழை தண்ணீர் சேர்ந்து புழல் அடுத்த வடபெரும்பாக்கம் - மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் புழல் பகுதியில் உள்ள நகர் பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆண்டுதோறும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து விட்டு, எந்தவித நடவடிக்கை எடுக்காமல் சென்று விடுகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மழைநீர் கால்வாய்களை அமைத்து புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் இணைக்க வேண்டும். அப்படி அமைத்தால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் இருக்கும். எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் ஊரக அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் நிரந்தர மழைநீர் கால்வாய் அமைத்திட வேண்டும்’ என்றனர்.

