திருத்தணி, டிச.5: திருத்தணியில் மின் சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடையில் அகல் விளக்கு சரிந்து விழுந்ததில் ரூ.லட்சம் மின் சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, திருத்தணி நகரம் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் நேற்று மாலை தீபம் ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது. இதில், இந்திரா நகரை சேர்ந்த ஜெயராமன்(42) எலக்ட்ரீசியன். அவர், வீட்டின் மொட்டை மாடியில் ரூபிங் சீட் அமைத்து அதில் டிவி, மிக்ஸி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். கார்த்திகை தீபத்தையொட்டி, நேற்று மாலை அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்துள்ளார். இரவு 10 மணியளவில் அகல் விளக்கு சரிந்து விழுந்ததில் மின்சாதன பொருட்களில் தீ பற்றிக் கொண்டது. உடனடியாக, திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பழைய மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

