புழல், நவ. 5: புழல் அம்பேத்கர் சிலை - செங்குன்றம் இடையே நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்பில் வாகன ஓட்டிகள் உள்ளனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல் - அம்பத்தூர் சாலை சந்திப்பில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் திசையில், புழல் மத்திய சிறைச்சாலையில் இருந்து காவாங்கரை சிக்னல் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தினசரி காலை, மாலை, இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆங்காங்கே வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒருசில நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் 108 வாகனம் ஆகியவை போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து, வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள், பலமுறை போக்குவரத்து நெரிசலான சாலையை அகலப்படுத்தக்கோரி நெடுஞ்சாலை துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். கம்பங்களை அகற்ற கோரிக்கை: அதன்படி, தற்போது புழல் அம்பேத்கர் சிலை அருகிலிருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் திசையில், புழல் சிறைச்சாலையின் சிறிய சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின்போது, சாலை நடுவில் உள்ள மின்சார மின் கம்பங்களை அகற்றாமல் நடைபெற்று வருவதால், உடனடியாக மின் கம்பங்களை அகற்றி, சாலைப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
