பள்ளிப்பட்டு, டிச.3: பள்ளிப்பட்டு அருகே உயரழுத்த மின்கம்பியில் சிக்கி ஆண் மயில் பரிதாபமாக பலியானது. பள்ளிப்பட்டு அருகே காப்புக் காட்டில் மான், மயில், உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நொச்சிலி காப்புக்காடு பகுதியில் நேற்று மதியம் இரை தேடி பறந்து சென்ற மயில் நொச்சிலி மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள உயரழுத்த மின் கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தது. மயில் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இருப்பினும், 2 மணி நேரமாக வனத்துறையினர் வராத நிலையில், சாலையில் இறந்து கிடந்த மயிலுக்கு பாதுகாப்பாக 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காத்திருந்தனர். மாலை 3 மணியளவில் வனவர் கோபி மற்றும் வன காவலர்கள் வந்து இறந்த மயிலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். சுமார் 8 வயதான ஆண் மயிலுக்கு பிரேத பரிசோதனை முடிந்து அரசு மரியாதையுடன் புதைக்கப்படும், என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
வேலி அமைக்க வேண்டும்: பள்ளிப்பட்டு பகுதியில் காப்புகாடு அருகே மாநில, மாவட்ட சாலைகளை கடக்கும் மான், மயில்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி இறந்து விடுகிறது. விலங்குகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் காடுகளுக்கு அருகில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

