ஆவடி, ஜூலை 29: தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஆவடி மாநகர போலீசார் 10 பதக்கங்கள், 2 கோப்பைகள் வென்றனர். தமிழ்நாடு காவல் துறையின் 2025ம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியின் துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதிவரை நடந்தது. இதில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக ரைபில், பிஸ்டல்/ரிவால்வர், கார்பைன்/ஸ்டன் கன் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் 13 வகையான போட்டிகள் நடந்தது.
மேற்கண்ட போட்டியில் ஆவடி காவல் ஆணையரக இணையதள குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், பிஸ்டல்/ரிவால்வர் பிரிவில் ரன் அண்ட் சூட் 40-30 யார்டுக்கான போட்டியில் வெள்ளி பதக்கமும், குயிக் ரிலாக்ஸ் 25 யார்டுக்கான போட்டியில் வெண்கல பதக்கமும், திருநின்றவூர் காவல் நிலைய எஸ்ஐ சுதா, பிஸ்டல்/ரிவால்வர் பிரிவில் ரன் அண்ட் சூட் 40-30 யார்டுக்கான போட்டியில் தங்கப்பதக்கம், குயிக் ரிலாக்ஸ் 25 யார்டுக்கான போட்டியில் வெள்ளி பதக்கமும், வேகமாக சுடுதல் 50 யார்டுகள் போட்டியில் வெண்கலப் பதக்கமும், பிஸ்டல்/ரிவால்வர் பிரிவில் ஓவர்ஆல் பெஸ்ட் சூட்டருக்கான தக்கப்பதக்கமும், ஆவடி போக்குவரத்து காவல் நிலைய பெண் காவலர் நந்தினி கார்பைன் ஸ்டன் கன் பிரிவில் 25 யார்டுகள் புல்லட் போட்டியில் தங்க பதக்கத்துடன் கார்பைன்/ஸ்டன் கன் பிரிவிற்கான ஓவர்ஆல் பெஸ்ட் சூட்டருக்கான வெள்ளி பதக்கமும், ரைபில் பிரிவில் 200 யார்டுகள் மண்டியிடும் நிலை போட்டியில் ஆயுதப்படை பெண் காவலர்கள் கோகிலாதேவி வெள்ளி பதக்கமும், செல்வராணி வெண்கல பதக்கமும் வென்றனர்.
மேலும், பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் மற்றும் கார்பைன் சுடுதல் ஆகிய 2 பிரிவுகளில் ஆவடி காவல் ஆணையரக பெண் போலீசார் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் மூன்றாம் இடத்திற்கான கோப்பையை வென்றனர். இந்நிலையில் நேற்று ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் காவல் துறையின் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்கள் மற்றும் 2 கோப்பைகளை வென்ற காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.