திருத்தணி, ஜூலை 29: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பாலாபிஷேகம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணியில் மலர் காவடி, மயில் காவடி, பன்னீர் காவடிகளுடன் மலை கோயிலில் குவிந்தனர்.
ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு பம்பை, உடுக்கை மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானின் பக்தி பாடல்கள் பாடியவாறு அரோகரா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் மலைக்கோயில் மாடவீதியில் சுற்றி வந்து முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தினர். மேலும், காவடி மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததால், மலைக்கோயில் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. மலைக்கோயில் மற்றும் நகரின் பல்வேறு மண்டபங்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஆடிப்பூர விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்