திருவள்ளூர், ஆக. 4: தழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழிதேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சிக்கு பிஎஸ்சி நர்சிங், பொதுநர்சிங் மற்றும் மருத்துவத்தில் டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 21 முதல் 35 வயதிற்குள்ளும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 9 மாதம். விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வருவாய் ஈட்ட வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோவின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.