Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூந்தமல்லியில் காரில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது

பூந்தமல்லி, ஜூலை 30: பூந்தமல்லியில் காரில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். பூந்தமல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி தலைமையில் தலைமைக் காவலர்கள் ஜேம்ஸ், செல்வம், கிருஷ்ணமூர்த்தி, ராமு மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்த முயன்றனர். போலீசாரைக் கண்டதும் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் சினிமா பாணியில் 2 கி.மீ. தூரம் காரை விரட்டிச் சென்று மடக்கினர். அப்போது, காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். இதையடுத்து, போலீசார் சோதனை மேற்கொண்டு காரின் பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டிவந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில், பிடிபட்டவர் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (38) என்பதும், இவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கிச் சென்றதும் தெரியவந்தது. காரில் சுமார் 500 கிலோ எடை கொண்ட உயர் ரக 7 செம்மரக்கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் காரில் பொருத்தப்பட்டிருந்த நம்பர் பிளேட் போலியானது என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் செம்மரக்கட்டைகளை திருவள்ளூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் காரிலிருந்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.