Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மரக்கன்றுகள் நடும் விழா: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர், ஜூன் 6: ஒவ்வொரு வருடமும் ஜூன் 5ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் ‘நில மீட்டெடுப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறன்’ என்ற மையக்கருத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களை உள்ளடக்கிய பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 5 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையங்கள் மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய இடங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இரண்டு மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் நிறுவ தயார் நிலையில் உள்ளன. இதுவரை மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் மூலமாகவும், விழிப்புணர்வு நிகழ்வுகளின் மூலமாகவும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஞ்சப்பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்கள் போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்ய ரிவர்ஸ் வென்டிங் மெஷின் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை 2 டன்னிற்கும் அதிகமான பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளது. துணி பைகள் தைப்பதை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை 30க்கும் மேற்பட்ட தையல் இயந்திரங்கள் இருளர் சமுதாய மக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கோயில்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற முக்கிய இடங்களில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பெருட்கள் மீதான தடை குறித்து விழிப்புணர்வு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அரசு நிகழ்ச்சிகளில் அரங்குகள் அமைத்தும், தெருமுனை நாடகங்கள் மூலமாகவும், செய்தித்தாள்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டும் ஆட்டோக்களில் ஆடியோ அறிவிப்பு மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கான தடையை கடுமையாக அமல்படுத்துவதற்காக, தொடச்சியாக தொழிற்சலைகள், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள், தெருவோர வியாபாரிகள், சந்தைகள் ஆகிய இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் எஸ்பி ரா.சீனிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் சு.அருண்குமார், கா.கயல்விழி, உதவிபொறியாளர்கள் கி.ர.லேகா மற்றும் சு.சபரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிற்சாலை பணியாளர்கள், சாரண, சாரணியர் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் மஞ்சபையுடன் மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். மேலும், மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை தாங்கும் திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் சாரண, சாரணியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் காமராஜர் சிலை வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், மாவட்ட செயலர் கே.சாம்சன் இளங்கோவன், மாவட்ட பயிற்சியாளர் கே.எபினேசர், மாவட்ட அமைப்பு ஆணையர் எஸ்.முரளி, சுகுணா தேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.