தேனி, அக்.30: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தார். இக்கூட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 91 மனுக்கள் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் மனு அளித்தவர்களுக்கு உடனடி தீர்வாக, ரூ.15,750 மதிப்பிலான வீல்சேர் ஒரு நபருக்கும், தலா ரூ.317 மதிப்பிலான பார்வையற்றோர் மடக்கு குச்சி 2 நபர்களுக்கும், ரூ.700 மதிப்பிலான ஊன்றுகோல் ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
  
  
  
   
