சின்னமனூர், ஆக.30: சின்னமனூர் அருகே பெருமாள் கோயில் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, ஹைவேவிஸ் அடிவாரப்பகுதியான பெருமாள் மலை, அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இங்கு, யானை, காட்டு மாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென, வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதில் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகின. மேலும் வனவிலங்குகளும் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில், சின்னமனூர் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.