தேவாரம், ஆக.30: தேவாரம் மற்றும் சுற்றியுள்ள லட்சுமிநாயக்கன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, தே.மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் ஆடு வளர்ப்பு தொழில் நடந்து வந்தது. அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஆடுகளை வளர்த்து அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்வது வழக்கமாக இருந்தது. முன்பு மிகவும் லாபகரமான தொழிலாக இருந்தது. இந்நிலையில் தற்போது மாறி வரும் சீதோஷ்ண நிலை மற்றும் நோய் காரணமாக ஆடுகள் இறந்துவிடுவதால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் ஆடு வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் இழந்து வருகின்றனர். இதனால் ஆடு வளர்ப்பு தொழில் நசிந்து வருகிறது. இதனால் இப்பகுதிகளை சேர்ந்த ஆட்டு இறைச்சிக் கடைக்காரர்கள் ஆடுகளை வாங்குவதற்கு திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். எனவே ஆடுகளுக்கு ஏற்படும் நோய்களை தடுத்து, ஆடு வளர்ப்பு தொழிலை லாபகரமானதாக மாற்ற மாவட்ட கால்நடை துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.