தேனி, ஆக. 29: தேனி நகரில் பாய்ந்து செல்லும் கொட்டக்குடி ஆற்றில் ஆகாயத் தாமரை படர்ந்துள்ளதால் சுகாதாரக்கேடாக மாறி வருகிறது. தேனி நகரில் உள்ள கம்பம் செல்லும் சாலையில் நடுவே கொட்டக்குடி ஆறு பாய்கிறது. தேனிக்கும் பழனிசெட்டிபட்டிக்கும் நடுவே இந்த ஆறு பாய்ந்தோடும் நிலையில் ஆற்றின் மேல் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஆற்றின் தடுப்பணையில் இருந்து பாலம் வரையிலும் ஆகாயத் தாமரைச் செடிகள் படர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் ஆற்றின் தன்மை மறைந்து, ஆறு சுகாதாரக்கேடாக மாறிப்போயுள்ளது. இதனால் ஆற்றில் உள்ள மீன் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து வருகிறது. எனவே, ஆற்றில் கொட்டக்குடி பாலம் பகுதியில் வளர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை பொதுப்பணித்துறை நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.