போடி, செப். 27: தமிழக அரசின் சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஊர்களிலும் மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போடி நகராட்சி மயான சாலையில் பழைய குப்பை கிடங்கு பகுதியை சுத்தம் செய்யப்பட்டு பெரிய மைதானமாக உள்ளது. இங்கு முதற் கட்டமாக 100 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. வளாகம் முழுவதும் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பார்கவி, சுகாதார அலுவலர் மணிகண்டன், கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் 100 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.