தேனி, செப். 27: பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தம்பதியை போலீசார் கைது செய்து, 3.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது. பெரியகுளம் அருகே கைலாசபட்டியில், கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் சாலையில் உள்ள நுழைவு வாயில் அருகே இருவர் கஞ்சா விற்பதாக பெரியகுளம் தென்கரை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தென்கரை போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அப்பகுதியில் தேவாரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் மாயன் மகன் பிரபாகரன்(40).
இவரது மனைவி விஜயலட்சுமி(39) ஆகிய இருவரும் இரு கட்டைப் பைகளில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கணவன், மனைவி இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் இருவரும் திருப்பூர் மணியம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே தற்போது குடியிருந்து வருவதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.