மூணாறு, ஆக.27: மூணாறு அருகே உள்ள மறையூர்-காந்தளூர் சாலை சீரமைப்பு பணி துவங்கியது. இப்பணிகள் ஒரு மாத காலத்திற்குள் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மறையூர் மற்றும் காந்தளூர் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. கேரளா-தமிழ்நாடு எல்லை கிராமமான இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதிகளின் வளர்ச்சிக்கு அம்மாநில அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் மிக சிறந்த சுற்றுலா கிராமத்திற்கான கோல்டன் விருது மறையூர்-காந்தளூருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மறையூர்-காந்தளூர் சாலையின் சீரமைப்பு பணிக்காக தேவிகுளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக பாபு நகர் முதல் பயஸ் நகர் மற்றும் ஆனகோட்டப்பாறை வரையிலான 4 கிலோமீட்டர் சாலையின் சீரமைப்பு பணிகளை நேற்று முன்தினம் எம்எல்ஏ அ.ராஜா தொடங்கி வைத்தார். இது குறித்து அவர், ஒரு மாதத்தில் சாலை பணிகள் நிறைவடையும். இதன் மூலம் சுற்றுலா கூடுதல் வளர்ச்சி அடையும் என தெரிவித்தார்.