தேவாரம், செப்.25: கோம்பை பேரூராட்சியில் உள்ள காலனி வழியாக புதுக்குளம் கண்மாய்க்கு வரத்து கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாய் மீது போக்குவரத்து பயன்பாட்டிற்கு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து அவர், போக்குவரத்து பாலம் கட்ட எம்எல்ஏ நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதற்கான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பாலம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் கோம்பை பேரூர் செயலாளர் முருகன், பேரூராட்சித் தலைவர் முல்லை மோகன் ராஜா, திட்டக்குழு உறுப்பினர் தங்க ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.