வருசநாடு, நவ.22: மயிலாடும்பாறை அருகே முறையாக குடிநீர் விநியோக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சிக்குட்பட்ட கருப்பையாபுரம், தாழையூத்து, அருகுவேலி, கருமலை சாஸ்தாபுரம், சத்தியதாய்நகர், உப்புத்துறை உள்ளிட்ட கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோக்கிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் வழங்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிராம பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைக்கனி கூறுகையில் கடந்த மூன்று மாதமாக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அனைவரும் தனியார் தோட்டங்களில் குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


