மூணாறு, நவ. 21: தமிழ்நாடு கரூர் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் இரண்டு வேனில் மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் தங்கள் வந்த பேருந்தை மூணாறில் நிறுத்தி விட்டு உள்ளூர் சுற்றுலா ஜீப்புகளில் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதன்படி நேற்று காலை மூணாறில் இருந்து ஐந்து ஜீப்புகளில் டாப் ஸ்டேஷன் பகுதிக்கு செல்லும் வழியில் மாட்டுப்பட்டி எஸ்டேட் அருகே வளைவில் காட்டுப்பாட்டை வாகனம் சாலையோரத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் வாகனத்தில் பயணம் 8 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் சீக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மூணாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பலத்த காயமடைந்த மாணவன் எர்ணாகுளம் பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜீப்பின் அதிக வேகமே விபத்திற்கு காரணம் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மூணாறு போலீசார் மற்றும் மோட்டார் வாகனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் வாகன துறை அதிகாரி தீபு தெரிவித்தார்.


