தேனி, செப். 19: பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பெரியகுளம் நகராட்சியை ஒட்டிய பகுதியாகவும், பெரியகுளம் நகராட்சியின் விரிவாக்க நகரை போன்ற கட்டமைப்பு வசதிகளுடனும் தென்கரை பேரூராட்சி அமைந்துள்ளது.
இப்பேரூராட்சியின் தலைவராக நாகராஜ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் சார்பில் ஏற்கனவே உள்ள அலுவலக வளாகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி கீழ்தளம் மற்றும் மேல் தளம் என இரண்டு மாடி கட்டிட வசதியுடன் சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தலைவர் மற்றும் செயல் அலுவலருக்கான அறைகள், நிர்வாக அரங்கம், கூட்ட அரங்கம், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நவீன கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.