போடி, செப். 19: போடியில் இருந்து மதுரை வரை 96 கிலோ மீட்டர் குறுகிய ரயில் பாதை பயணிகளின் சேவையாக இருந்தது. பொதுமக்கள், பயணிகள், வணிக வியாபாரிகள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி கடந்த 2010ம் ஆண்டு சாலை அடைக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது. ஒரு ஏழு ஆண்டுகளாக பணிகள் நடை பெறாமல் இருந்த நிலையில் ரூ.450 கோடி நிதியில் அகலப் பாதையாக மாற்றினர்.
அதில் மெகா பாலங்கள், நவீன ஸ்டேஷன்கள், முறையான சிக்னல்கள் அமைக்கப்பட்டு கடந்த 2022ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் அடிக்கடி மாத ஒருமுறை மதுரை கோட்டத்தில் இருந்து ரயில்வே அதிகாரிகள் மதுரையில் துவங்கி போடி வரை ஆய்வு செய்வது வழக்கம்.
அதன்படி நேற்று மதுரை கோட்டத்தில் இருந்து ரயில்வே அதிகாரிகள் போடி ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், பயணிகளுக்கு முறையாக ரிசர்வ் செய்யப்படுகிறதா, அதில் எதுவும் தாமதம் ஏற்படுகிறதா, நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட சீட்டுகள் சரியாக பயணிக்கு வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். மேலும் பயணிகள் வருகின்ற போது அவர்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை குறித்து ஆய்வு செய்தனர்.